தலைவன் கூற்று
( தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் இளங்கீரன்
இனி பாடல்
யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை
நுண்மண லறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.
- இளங்கீரன்
உரை-
(நெஞ்சே) என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது வண்டுகள் தாவுகின்ற கூந்தல் ,வளப்பம் பொருந்திய சோழரது உறையூரில் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய கருமணல் நீண்டு படந்தாற் போன்ற நல்ல நெறிப்பை உடையன.வாசனைத் தன்மையும் உடையன.’.
(கருத்து) தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.
(உறந்தை பெருந்துறை- காவிரித்துறை நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு).
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கூந்தலாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவன் ஆதலின் அக் கூந்தலின் இயல்புகளை நினைந்து, இவற்றாற் பெறும் இன்பத்தை இடைவிடாமல் நுகரும் பேறு பெற்றிலேமே என்னும் இரக்கக் குறிப்புப்பட இதனைத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.
No comments:
Post a Comment