தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வராததால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவு பொறுக்கமுடியாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)
நெய்தல் திணை- பாடலாசிரியர் வாயிலான் தேவன்
இனி பாடல்-
கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற்
கவிரித ழன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வ றோழி யானே.
-வாயிலான் தேவன்
உரை-
(தோழி) மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேடுகின்ற
முள்ளு முருங்கை மலரின் இதழைப்போன்ற மெல்லிய இறகையும், செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவும் நீர்த்துளிகளையுடைய பிரிந்தார் துயரடையக் காரணமான வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்திலும் பிரிந்து சென்ற என் தலைவன் வரவில்லை.இனி நான் வாழ்வேனல்லேன்.
(கருத்து) தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.
( “என்னுடன் தாம் சேர்ந்திருத்தற்குரிய இவ்வாடைக் காலத்திலும் தலைவர் வரவில்லை. இவ்வாடையின் துயர் பொறுத்தற்கு அரிதாயிற்று; அவருடைய பிரிவை இக்காலம் மிகுதியாகப் புலப்படுத்தி விட்டதாதலின் இனி உயிரை வைத்துக் கொண்டு ஆற்றும் ஆற்றல் இல்லேன்” என்று தலைவி கூறி வருந்தினாள்.)
No comments:
Post a Comment