தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் மோவாய்ப்பதுமன்
இனி பாடல்-
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
மாண்வரி யல்குற் குறுமகள்
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.
- மோவாய்ப்பதுமன்
உரை-
விரிந்த அலையையுடைய பெரிய கடல் வளைந்த பூவுலக இன்பமும்,, பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும் ,
ஆகிய இரண்டும் தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் , பொன்னைப் போன்ற நிறத்தையும் மாட்சிமைப்பட்ட பெண்ணழகையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும் அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.
(கருத்து) தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.
(தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல்.)
No comments:
Post a Comment