Sunday, September 7, 2014

குறுந்தொகை - 99



தலைவன் கூற்று
( தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினவ... தோழியிடம், “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
   
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
   
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
   
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை

இறைத்துணச் சென்றற் றாஅங்
   
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.

                    -ஔவையார்

உரை-

உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு பெருகும் வெள்ளம், பிறகு கையால் இறைக்கும் அளவிற்கு சிறுகிச் சென்று இல்லாமல் ஆனது போல. வெள்ளத்தைப் போன்ற காம நோய், இங்கு நான் வருதலால் முடிவடையும் படி ஆழ்ந்து நினைத்தேன் அல்ல போலும்.அங்ஙனம் எண்ணி மீண்டும் மீண்டும் மிக நினைவு கொள்ளவில்லை போலும்.அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுவதற்கு மாறாக இருக்கும் உலக இயல்பை எண்ணி மயங்கினேன் போலும்.


 (கருத்து) யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.

No comments: