தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வரவில்லை. “இனி அவர் வந்தாலும், வராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து விடுவேன்” என்று தலைவி கூறியது.)
முல்லை திணை- பாடலாசிரியர் கிளிமங்கலங்கிழார்
இனி பாடல்-
வாரா ராயினும் வரினு மவர்நமக்
கியாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
றின்னா தெறிதரும் வாடையொ
டென்னா யினள்கொ லென்னா தோரே.
- கிள்ளிமங்கலங்கிழார்
உரை-
நீரிலுள்ள நீலத்தினது மலரும் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலில் உள்ள மயில்தோகையில் உள்ள கண்னைப் போன்ற கருவிளை மலரை அலைத்து, நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும், துய்யையும் உடைய மலர்கள் உதிரும்படி குளிர்ச்சியுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக்காற்றால் எத்தன்மையினள் ஆனாளோ? என நினைத்து கவலைப்படாத தலைவன் இனி வந்தாலும், வராவிட்டாலும் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார்? (வருவதற்குள் இறந்துவிடுவேன்)
(கருத்து) தலைவர் வராவிட்டால் நான் இறந்துவிடுவேன்.
(“உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையால் நான் இனி இறந்து விடுவேன்; நான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் ?பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.)
No comments:
Post a Comment