Wednesday, September 5, 2018

நாடகப்பணியில் நான் - 49


"பாரத ரத்னா" நாடகம் என் நீண்ட நாளைய ஆசை ஒன்றை நிறைவேற்றியது? என்று சொன்னேன் அல்லவா?

அது என்ன என்று சொல்வதற்கு முன் ஒரு சிறு ஃபிளாஷ் பேக்..

கீழாம்பூர் அவர்களை எனக்குக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகத் தெரியும்.அவர் சிறுவனாய் இருந்த போதே , அவர் திறமைக் கண்டு வியந்தவன்.

தகப்பனுக்குப் பாடம் சொன்னவனைப் போல , கீழாம்பூர் ஒரு நாள் என்னிடம், "நீங்கள் சிறுகதைகள் ஏன் எழுதக் கூடாது?" என ஊக்குவித்தார்.அத்துடன் நில்லாது என் முதல் கதை "ஓய்வு" என்ற பெயரில் , ஜெயராஜ் அவர்கள் வரைந்த ஓவியத்துடன் கலைமகளில் பிரசுரமும் செய்தார்.
இதுவரை எனது 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன என்றால்..அதற்கானக் காரணம் கீழாம்பூரும், என்னை அவ்வப்போது மெருகேற்றிய நண்பர் வண்ணதாசனுமே.அவர்களுக்கு என் நன்றிகள்.

அந்த சமயங்களில், ப சிதம்பரமும், அவரது அண்ணன் ப லட்சுமணனும் இலக்கியச் சிந்தனை என்ற விருதினை ஏறபடுத்தினர்.மாதந்தோறும் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த மாதத்திற்கான சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனை விருதினை அளிப்பர்.அந்த ஆண்டு முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளில் ஒன்றை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்து கேஷ் பிரைஸ் அளிப்பர்.அந்த பன்னிரெண்டு கதைகளையும் வானதி பதிப்பகம் நூலாக வெளியிடும்.

எனக்கும் ஒரு முறையேனும் "இலக்கியச் சிந்தனை" விருதை பெற்றிட வேண்டும் என்ற ஆசை இருந்தது (முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டேனோ).

அந்த ஆசை "பாரத ரத்னா" நாடகம் மூலம் நிறைவேறியது.ஆம், 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடக நூலாக இலக்கியச்சிந்தனை விருது எனக்குக் கிடைத்தது.லட்சுமணன் சாருக்கு நன்றி

(இதுவரை நாடகத்திற்காக சுஜாதாவிற்கும், கோமலுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது இவ்விருது.மூன்றாவதாக நான்.எனக்குப்பின் ஸ்ரீவத்சனுக்கும், சித்ராலயா ஸ்ரீராமுக்கும் கிடைத்துள்ளது)

பாரத ரத்னா எனது நாடகப்பணியில் ஒரு மைல்கல் எனலாம்.

இனி அடுத்த நாடகம்...குறித்து விவாதித்தோம். என்ன முடிவெடுத்தோம்? அடுத்துப் பார்ப்போம்.

No comments: