Thursday, September 13, 2018

தமிழ்நாடகபப்ணீயில் நான் - 56

அடுத்து நாங்கள் அரங்கேற்றிய நாடகம் "பத்ம வியூகம்"

ஏற்கனவே, யூஏஏ விற்காக மௌலி பத்மவியூகம் என்ற நாடக ஒன்றை எழுதியிருந்தார்.

ஆகவே, நம் நாடகத்திற்கும் அப்பெயரா? வேறு ஏதேனும் வைக்க முடியுமா? என யோசித்தேன்.ஆனால், "பத்ம வியூகம்" என்ற தலைப்பே சரி..என முடிவெடுத்தேன்.

காரணம்...

மகனை நம்பி, தன் வசதிக்கு அதிகமாக செலவழித்து டாக்டருக்கு படிக்க வைக்கின்றனர் ஸ்ரீனிவாசன்,மைதிலி தம்பதியினர்.ஆனால், படித்து முடித்ததும் தனக்கு ஒரு வளமான எதிர்காலம் வேண்டும் என விரும்பும் மகன் , பணக்கார பெண்ணை மணமுடித்து, அவர்கள் வீட்டு மாப்பிள்ளை ஆகிறான்.

பெற்றோரோ..மகன் செய்யும் தவறையெல்லாம் பொருட்படுத்தாது பிள்ளை பாசத்தில் தவிக்கின்றனர்

பாசம் என்பது, பத்மவியுகம் போல.அதனுள் சென்றுவிட்டால் வெளியே வரத் தெரியாது/ வரமுடியாது அபிமன்யூவைப் போல உயிரைவிடும் நிலையே உருவாகும் என்று சொன்ன நாடகம்

இதில் மைதிலியாக நடித்த காவேரி சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.கரூர் ரங்கராஜன் ஸ்ரீனிவாசன் பாத்திரம் ஏற்றார்.

இந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் மகனின் கல்லூரி செலவிற்காக வேறு வழியில்லாமல் தாய் தனது தாலியைக் கழட்டித் தருவார்.அப்போது ஸ்ரீனிவாசன் நெஞ்சடைக்க.."மைதிலி:" என்பார்.
அதற்கு மைதிலி பாத்திரம் சொல்லும் வசனம்..

"ஏங்க..உங்களைக் கேட்காம இதை நான் செய்யறேனேன்னு பாக்கறீங்களா..
ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்கும் வரைக்கும் தான் அது எழுதினவருக்கு உரிமை.தபால் பெட்டியில் போட்டதுமே, அதில் எழுதப்பட்டுள்ள முகவரியாளருக்கே உரிமை.அதுபோல நீங்கக் கட்டின தாலி அதைக் கட்டறவரைக்கும் தான் உங்களுக்கு சொந்தம்.அதைக் கட்டினதுமே அது எனக்கு மட்டும்தாங்க சொந்தம்" எனக் கூறியபடியே அழுவார்.

அரங்கில் கைத்தட்டலை அள்ளிச் சென்ற காட்சி இது.  

No comments: