Wednesday, October 3, 2018

நாடகப்பணியில் நான் - 74



சாதாரணமாக நாடகக் குழுக்களுக்கு, குறிப்பாக அமெச்சூர் குழுவினருக்கு, அவ்வப்போது யாரேனும் ஒரு நடிகரால் வர இயலாமல் போகிவிடும்.

அது போன்ற நேரங்களில், பிற நட்பு குழுக்கள் உதவியாக வரும்.அதாவது, அந்தக் குழுவில் நடிக்கும் நடிகர் ஒருவர், வர இயலாமல் போகும் நபரின் பாத்திரத்தை ஏற்று குறுகியக் காலத்தில் தயாராகி நடித்துக் கொடுப்பார்

அப்படி, பல சந்தர்ப்பங்களில் சௌம்யா குழுவிற்காக நடித்துக் கொடுத்தவர் மயூரப்பிரியாவின் முத்துக்குமரன் ஆவார்.

தவிர்த்து, அந்த நாட்களிலேயே எங்களது சௌம்யா குழுவின் "காயத்ரி மந்திரம்" நாடகத்தில் தில்லை ராஜனும், சங்கரும் (இன்றைய இயக்குநர்) நடித்துக் கொடுத்துள்ளனர்.

எஸ் பி ஐ முரளி சில நாடகங்களில் நடித்துக் கொடுத்துள்ளார்.சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகம் மதுரையில் நடந்த போது எம் பி மூர்த்தி உதவியுள்ளார்.

அவர்கள் அனைவருக்கு என் நன்றிகள்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

என்றும் அன்புடன் நாடகம் அரங்கேறியப் பிறகு, அடுத்த தேதிகளில் நடைபெறுமா? என்ற பிரச்னை வந்தது என்றேனே! அதை எளிதாகத் தீர்த்து வைத்தார் என் நண்பர்.அது என்ன தெரியுமா?

அந்நாடகத்தில் முக்கியமான கும்பகோணம் மாமா பாத்திரத்தில் முதல் நாளன்று நான் நடித்தேன்.

அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் வசித்து வரும் எனது மகள் வீட்டிற்கு நான் செல்ல வேண்டிய நிலை.

அப்போது.குருகுலம் எம் பி மூர்த்தியிடம், நிலைமையை விளக்கிக் கூறி..அந்தப் பாத்திரத்தில் நடித்துத் தர முடியுமா? என்றேன்.

அவரும் உடனே தன் உதவிக் கரத்தை நீட்டினார்.

சாதாரணமாக ஓருரு காட்சிகளுக்கு மட்டுமே பிற நண்பர்கள் உதவுவர்.ஆனால்  மூர்த்தி..அந்த நாடகம் சபாக்களில் நடந்து முடியும் வரை நடித்துக் கொடுத்தார்.

இது போன்ற நண்பர்களை எண்ணும் போது எனக்கு வள்ளுவன் சொன்ன மழையே ஞாபகம் வருகிறது

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

(கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்)

அவருக்கு என் அன்பும் நன்றிகளும்

No comments: