Friday, October 12, 2018

நாடகப்பணியில் நான் - 84



என்னுடைய குழுவின் "உயிருள்ள இறந்த காலங்கள்" நாடகம் பல விதங்களில் ஒரு Trend setter ஆக அமைந்தது.

என் நண்பர் பரத் எழுதிய நாடகம் இது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடைபெறுவது போன்ற  நிகழ்ச்சிகளைக் கொண்டது இந்நாடகம் என முன்னமேயெ சொல்லியுள்ளேன்.

பனி படர்ந்த மலையடிவாரத்தில், ராணுவ வீரர்களுக்கான டென்ட், வெடிக்கும் எலிகாப்டர் என தன் திறமை முழுதும் காட்டி அசத்தியிருந்தார் அரங்க அமைப்பாளர் எக்செலன்ட் மணி.

அவருக்கு இணையாக கோம்ஸ் ஒளி அமைப்பு.

ராணுவ வீரர்களுக்கான ஒப்பனையை திறம்படச் செய்திருந்தார் ஒப்பனைக் கலைஞர் வேணு.அவருடன் ஒல்லியாய் ஒரு உதவியாளரும் வருவார்.அந்த உதவியாளர் உதவி இல்லாமல் இன்றைய குழுக்கள் நாடகங்கள் நடத்த முடியா நிலை உருவாகியுள்ளது.அந்த அளவு திறமையை வளர்த்துக் கொண்டு இன்று தனி ஒருவனாக உலாவரும் ஒப்பனைக் கலைஞர் பெரம்பூர் குமாரே அவர்.

அவரது திறமைக்குச் சான்று ஒன்று...தெய்வத்துள் தெய்வம் என்ற மகாபெரியவாளின் நாடகத்தில் அவராகவே மூன்று கலைஞர்களுக்கு ஒப்பனைச் செய்தது.

அடுத்து மணிபாரதி, ராம்கி, சுவாமிநாதன், ஊட்டி குமார் இவர்களுடன் நானும் நடித்தோம்

இந்தியப் பெண்ணாகவும், பாகிஸ்தான் உளவாளியாகவும் பாலா என்றொரு நடிகை நடித்தார்.அவர் நடிக்க இயலா சில நாட்களில் குட்டி பத்மினி அப்பாத்திரம் ஏற்று நடித்து உதவினார்.

மைலாப்பூர் அகடெமி அந்த ஆண்டுக்கான சிறந்த நாடகம் என சான்றிதழ் வழங்கியது.

இந்நாடகத்தில்தான் இன்றும் எங்கள் ஆஸ்தான நாயகனாக விளங்கும் பி டி ரமேஷ் அறிமுகமானார்.அறிமுக நாடகத்திலேயே சிறந்த  நடிகருக்கான மைலாப்பூர் அகடெமியின் சான்றிதழைப் பெற்றார்.

பரத் அவர்களின் திறமையை பளீச்சிட வைத்த நாடகம் இது என்றால் மிகையில்லை எனலாம்.

No comments: