நாம் காணும் கனவுகள்..சில வேளைகளில் உண்மையைப் போல இருப்பதுண்டு.கண்டது கனவா..அல்லது உண்மை நிகழ்வா என ஆச்சரியப் பட்டதுண்டு.அது போன்ற ஒரு நிகழ்வு குறுந்தொகையில் தலைவிக்கு உண்டானது.
தலைவன் தலையைப் பிரிந்து பொருளீட்ட வெளியே சென்றுள்ளான்.அவனது பிரிவால்...வாடும் தலைவி..அவன் தன்னுடன் இருப்பதை போல கனவு காண்கிறாள்.
தோழி தலைவியின் ஆற்றாமைக்கான காரணம் கேட்க தலைவிஉரைக்கிறாள்.
இனி பாடல்
பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப் பேட்டு நன்னாகையார்.
கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சா அய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே,
- கச்சிப் பேட்டு நன்னாகையார்.
உரை -
தோழி (என் ஆற்றாமை காரணத்தை) கேட்பாயாக! பொய் கூறுவதில் வன்மை உடைய தலைவன், என் உடலை உண்மையாக அணைத்தாற்போல பொய்யாகிய கனவு உண்டாக..உண்மை யென எழுந்து..தலைவன் உள்ளான் என படுக்கையைத் தடவினேன்.வண்டுகள் அமர்ந்து (தேனருந்தி சென்ற குவளை) சென்ற குவளை மலரைப் போல நான் உண்மையாகவே மெலிந்து தனித்தவளாயினேன் .
வண்டுகள் அமர்ந்து சென்ற குவளை மலரைப் போல....உவமை எப்படி?
1 comment:
வண்டுகள் தேன் உண்டு சென்ற குவளை மலர் அழகான உவமை! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment