Sunday, July 6, 2014

குறுந்தொகை - 32




தலைவன் கூற்று
(தலைவியின் பிரிவை தாங்க முடியவில்லை.அவளை அடையும் பொருட்டு மடலேறினால் தலைவியின் மீது பழி உண்டாகும்.அன்றி, நான் சும்மா இருந்தாலும் அவளுக்குப் பழியாகும்.ஆகவே நீ என் குறையை அவளுக்குத் தெரிவி என தோழியினிடம் தெரிவிக்கிறான்)

 குறிஞ்சி திணை . பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லையார்.


காலையும் பகலுங் கையறு மாலையும்
   
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
   
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
   
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
5
தெற்றெனத் தூற்றலும் பழியே
   
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

                             -  அள்ளூர் நன்முல்லையார்.



உரை-

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும்,பிரிவதற்கான மாலைப் பொழுதும், ஊர் உறங்கும் இரவும், விடியற்காலமும் ஆகிய இச் சிறு பொழுதுகள் இடையே காமம் தோன்றில், அத்தகையோர் காமம் பொய்யானது.தலைவனிடம் பிரிவு வருமாயின்.பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து தெருவில்வந்து இவளால் இவன் இச்செயல் செய்தானென்று அனைவரும் அறியுமாறு தலைவி செய்த துயரை பலர் அறியச் செய்தலும் பழி வாங்கும் செயலாகும். அப்படியின்றி உயிருடன் இருத்தலும் பழிக்குக் காரணமாகும். (என தன்னிலைப் பற்றி தோழியிடம் கூறுகிரான் தலைவன்)

(நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்).






1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான விளக்கம்! நன்றி!