Friday, July 4, 2014

குறுந்தொகை - 31




ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள்.ஆனால் வீட்டில் பெற்றோரிடம் சொல்ல பயம். ஆனால். பெற்றோர் இவளுக்கான துணையைத் தேடுகின்றனர்.ஒருவனைத் தேர்ந்துமெடுக்கின்றனர்.இனியும் வாளாயிருந்தால் பயனில்லை என , அவள் தான் ஒருவனை விரும்புவதைத் தெரிவிக்கிறாள்.

இப்படி நடப்பது...இன்றைய காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் நடந்துள்ளது கீழ் கண்ட பாடல் மூலம் அறியமுடிகிறது.

( தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் ஆடும் அணங்கு. உடன் ஆடுபவனுடன் நட்பு கொண்டிருந்தேன்.இப்போது அவனுடன் ஆன; என்னோடு நட்பு பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் . அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).

மருதம் திணை-  பாடலாசிரியர்

இனி பாடல் -
 
மள்ளர் குழீஇய விழவி னானும்
 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
 
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
 
யானுமோ ராடுகள மகளே யென்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
 
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

                              -ஆதிமந்தியார்

உரை-

வீரர் கூடியுள்ள விழாவிலும், மகளிர் தங்களுக்குள் தழுவி ஆடும் கூத்து, ஆகிய எவ்விடத்தும் மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய அவனை நான் (இப்போது பிரிந்துள்ளேன்) காணவில்லை...நான் ஒரு ஆடுகளத்தில் ஆடும் பெண்ணாயிருந்தும்.என் கையில் உள்ள சங்கை அறுத்து செய்யும் வளையல்களை நெகிழச்செய்த  பெருமை பொருந்திய என் தலைவனும் ஆடுகளத்தில் உள்ள ஒருவனே

(இப்பாடலில் துணங்கை என்பது ஒருவகைக் கூத்து.மகளிர்
 ஆடும் இதில் முதற்கை கொடுப்பது ஆண்கள்.இப்பாடலில் ஆடும்மகளான தலைவிக்கு முதற்கை கொடுத்த தலைவனும் ஆடும் மகன் என்பது மறைந்து நிற்கும் செய்தி)

(இப்படிப்பட்ட தலைவன் இருப்பதால்..மணத்திற்குரிய பரிசத்துடன் வேறு ஒருவர்  அறன் ஆகாது என தோழியிடம் சொல்கிறாள்)

No comments: