Monday, July 14, 2014

குறுந்தொகை - 41



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனி பொலிவிழந்ததை கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; அவரைப் பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)


  பாலைத் திணை  _ பாடலாசிரியர் அணிலாடு முன்றிலார்

இனி பாடல்-

காதல ருழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
 
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
 
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்

புலப்பில் போலப் புல்லென்
 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

.
                     -அணிலாடு முன்றிலார்.
 
உரை-

தலைவர் பக்கத்தில் இருந்தால் மிக மகிழ்ச்சியுற்று, விழா கொண்டாடும் ஊரிலுள்ளோர் மகிழ்வதைப் போலநிச்சயமாக மகிழ்வேன்..அவர் என்னை பிரிந்து சென்ற காலத்தில் ,பாலை நிலத்தில் பொருந்திய அழகிய குடியுடைய
சிறிய ஊரில் மனிதர்கள் நீங்கிச் சென்றதும் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல
பொலிவிழந்து வருந்துவேன்.


(தலைவனைப் பிரிந்தால் வருத்தமுறுவேன்) .

அதிக எண்ணிக்கையுள்ளோர் உள்ள வீடு.கலகல வென இருக்கும்.ஒருநாள் அவ்வீட்டிலிருப்போர் காலி செய்து வேறு இடம் சென்றுவிடுகின்றனர் அப்போது அவ்வீட்டினுள் நுழைந்தால் பழைய கல்கலப்பு இல்லை.வெறிச்சோடு இருக்கும் இல்லத்தில் அணில்கள் இங்கும் அங்கும் ஒடுகின்றன.இக்காட்சியை நினைத்துப் பாருங்கள்.
அப்படி வெறுமையாயிடுமாம் தலைவியின் மனம்.என்னவொரு அழகான ஒப்புமை!!

No comments: