தலைவி தோழிக்கு உரைத்தது
(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.
- பரணர்
உரை -
உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய, மாணை என்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன், என் நெஞ்சு இடமாய் இருந்து பிரியேனென்று, எனது நல்ல தோளை அணைந்த போது அத்தலைவன் உறுதிமொழி அளித்தது மறந்தது உன் வருத்தத்திற்கு காரணமாகுமா(ஆகாதல்லவா?)
(கருத்து) தோழி, தலைவன் உறுதிமொழி உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம் தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக் காரணமில்லை.
1 comment:
அருமையான பாடல்! அழகான விளக்கம்! நன்றி!
Post a Comment