தோழி உரைத்தது
(தலைவன் பிரிந்து சென்றுள்ளான்.தலைவியோ அதனால் வருத்தத்தில் உள்ளாள்.தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.அவர் சென்ற பாலை நிலத்தில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை தன் துதிக்கையால் மரப்பட்டையை உரித்து நீரை பருகச் செய்யும்.அதைக்கண்டதும் உன் நினைவு வந்து தலைவன் திரும்புவான்" என்கிறாள்)
பாலைத் திணை -பாடலாசிரியர் பெருங்கடுங்கோ
இனி பாடல் -
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
- பெருங்கடுங்கோ
உரை-
தலைவன் உன் மீது அன்புள்ளவன். தலையளி செய்தலும் உடையவர்..அவர் சென்ற வழிகளில், பெண் யானையின் பசியை நீக்க, பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்படியே பருகச் செய்யும்.(அதைக்கண்டு உன் ஞாபகம் வர திரும்புவார்)
கருத்து - தலைவர் விரைவில் வருவார்
(பெண் யானை தாகம் தீர்க்க ஆண்யானை செய்யும் செயல் தமக்குரிய மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும் இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.)
யா மரம் பாலை நிலத்தில் வளரும் மரம் என் சங்கப் பாடல்கள் சொல்கின்றன.
No comments:
Post a Comment