Friday, July 18, 2014

குறுந்தொகை - 45



தோழி கூற்று
(வேசியிடம் சென்ற தலைவன் விட்ட தூதுவர் மீண்டும் தலைவியினிடம் வர தலைவன் வர விரும்புவதை வேண்டியபொழுது, தலைவி அதற்கு உடன்பட்டாள் என அறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடன்பட்ட இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஆலங்குடி வங்கனார்

இனி பாடல்-
 
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
   
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
   
மல்ல லூர னெல்லினன் பெரிதென
   
மறுவருஞ் சிறுவன் றாயே

தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.

               -ஆலங்குடி வங்கனார்


உரை-

காலையில் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து தூய அணிகலன்களை அணிந்த வேசியிடம் சென்ற வளமான ஊரையுடைய தலைவன் மிக்க விளக்கத்தை உடையவன் என எண்ணி, ஆண் குழந்தையினைப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மன வேதனை அடைவாள்.மனம் வருந்தும் செயலைச் செய்யினும் அதனை மறக்க வேண்டிய குடியில் பிறந்ததற்காக,


    (கருத்து)தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலால் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.

   (வேசியிடம் சென்று திரும்பிய தலைவன், தனது மனைவி ஆண்மகன் பெற்றதை அறிந்து அம்மகனைக் காணவருதலும், தலைவி கற்பொழுக்கத்தின் சிறப்பால், அவன் செய்த தவறை மறந்து ஏற்றுக் கொள்வது மரபு . ஆனால் செய்யுளில் "தெறுவதம்ம" என தோழி கூறியது அப்படி ஏற்றுக் கொளல் தகாது என்பதாக தோழி கருதுவதாகக் கொள்ள வேண்டும்) 

No comments: