Monday, July 14, 2014

குறுந்தொகை - 40



தலைவன் கூற்று
(தலைவன் தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என தலைவி நினைப்பதை உணர்ந்து தலைவன்   ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் செம்புலப் பெயனீரார்


இனி பாடல்-

 
யாயு ஞாயும் யாரா கியரோ
   
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
   
யானு நீயு மெவ்வழி யறிதும்
   
செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.


                       செம்புலப் பெயனீரார்

உரை -

என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தைகைய உறவினர்? என் தந்தையும்,உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நானும், நீயும் ஒருவரை ஒருவர் முன்பு எவ்வாறு அறிவோம்?இம்மூன்றும் இல்லையாயினும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணோடு கலந்து அந்த நிறத்தை பெறுவது போல
 அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.
 
    (கருத்து) இனி நாம் பிரியமாட்டோம்.

No comments: