Thursday, July 31, 2014

குறுந்தொகை - 62


தலைவன் தனக்கே சொல்லிக்கொண்டது
(இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாள் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் வாசமும், மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சிறைக்குடி யாந்தையார்

இனி பாடல்-

 
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
   
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
   
ஐதுதொடை மாண்ட கோதை போல
   
நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே.

                              -   சிறைக்குடி யாந்தையார்

   உரை -

காந்தள் மலரையும், அரும்பிலிருந்து உண்டாகிய செவ்விய மலர்களாகிய முல்லைப் பூக்களையும், மணக்கும் இதழ்களையுடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி அழகிதாகத் தொடுத்த மாட்சிமைப்பட்ட மலையைப் போல நல்ல வாசத்தையுடைய தலைவியின் மேனியானது, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, தழுவுதற்கும் இனியது.


(கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

குறுந்தொகை - 61



தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறவில்லையாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலால் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்ரும் இல்லை" என்று கூறித் தோழி அனுமதி மறுத்தது.)


மருதம் திணை - பாடலாசிரியர் தும்பிசேர்கீரன்

இனி பாடல்-

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்துஇன் புறாஅ ராயினும் கையின்

ஈர்ந்துஇன் புறூஉம் இளையோர் போல

உற்றுஇன் புறேஎ மாயினும் நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்துஇன் புற்றனெம் செறிந்தன வளையே

                                   -தும்பிசேர்கீரன்

உரை-

தச்சனால் செய்யப்பட்ட சிறு குதிரை பூட்டப்பெற்ற சிறுவண்டியை ஏறிச் செலுத்து இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும், பொய்கையையும் உடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மேன்மேலும் பெருகச்செய்து இன்பம் அடைந்தோம்.அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

(கருத்து) தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறக்கவில்லை


(மரத்தச்சன் செய்த குதிரை, மரக்குதிரையே ஆனாலும், அதனை ஓட்டும் சிறுவர்கள் அதனை உண்மையானக் குதிரை என்றே எண்ணியே ஓட்டி மகிழ்வர். நல்ல பல தேர்களையும் பல பொய்கைகளையும் கொண்ட ஊரை உடையத் தலைவனது மெய்யோடு மெய்சேர்ந்து இன்பம் பெறாவிட்டாலும், அவனுடன் மனதளவில் நான் கொண்ட காதலால் இன்பமடைந்திருக்கிறேன்.. அதனால் என்னுடைய கை வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்துவிடவில்லை..!! (தலைவனது பிரிவால் கை வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு உடல் மெலியும்... ஆனால் அது இப்போது இல்லாமல் போய்விட்டது).








Wednesday, July 30, 2014

எமக்கு என்ன ...


                               



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது


குறுந்தொகை - 60

தலைவி கூற்று

(தலைவனது பிரிவை தாங்க முடியாத  தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாமல் இருப்பினும் அவரைக் கண்டதுமே எனக்கு இன்பம் பிறக்கும்; அஃது இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல் -
 
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
   
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
   
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
   
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
5
நல்கார் நயவா ராயினும்
   
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

                  - பரணர்

உரை -
உயர்ந்த மலையில் உள்ள குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைய (அதில்) பெரிய தேனடையைக் கண்ட , காலில்லா எழுந்தும் நிற்க முடியாத முடவன், உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அத்தேனடையை பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப்போல தலைவர் என்னிடம் பேசவிரும்பாராயினும், அவரைப் பலமுறைப் பார்த்தல் என் நெஞ்சிற்கு இனிமை தரும்.

(கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.


முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாலும், அது கிடைக்காது எனினும், அதைக்கண்டளவிலே இன்பம் அடைவது போல தலைவரிம்ன் தண்ணளியையும், நயப்பையும் பெறாவிடினும் அவரைக் காண்பதே இன்பம் (என்கிறாள் தலைவி)

   

Tuesday, July 29, 2014

குறுந்தொகை - 59




தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை தாங்காது வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் உன்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் திரும்புவார்" என்று தோழி கூறியது.)

பாலைத்திணை - பாடலாசிரியர் மோசிகீரன்


இனி பாடல்-
 
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
   
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
   
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
   
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள்
   
நிரம்பா வாகலி னீடலோ வின்றே.

                     - மோசிகீரன்

உரை-

 கண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய பறை . பாணர் முதலிய இரவலரைப் பாதுகாக்கவனது அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள அகன்றவாயையுடைய ஆழமுள்ள சுனையினிடத்து மலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும் உனது நல்ல நெற்றியை தலைவர் மறப்பாரோ?பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள் முற்றக் கை கூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீடித்து தங்குதல் இலதாகும்.ஆகவே நீ வருத்தப்படாதே!

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.

 

    (வி-ரை.) பதலை - ஒருகண் மாக்கிணையென்னும் பறை. பரிசிலர் கோமானென்றது பரிசிலருக்குப் பரிசில் தந்து பாதுகாக்கும் தலைவன்.

Monday, July 28, 2014

இரு நிலவுகள்

                          



பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

குறுந்தொகை -58




தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்.

இனி பாடல்-
 
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 
கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்
 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

.                        -வெள்ளிவீதியார்

உரை-

இடித்துரைக்கும் நண்பரே! நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நல்லது.என் விருப்பமும் அதுவே! சூரிய வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையினிடத்தே , கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணையைப் போல என்னிடத்தில் உண்டான இக்காமநோய் பரவியது.பொறுத்துக் கொண்டு நீக்குதற்கு அரியதாக உள்ளது.

 (கருத்து) காமநோய் பொறுத்தற்கரியது..

வெண்ணெய் சூரிய வெப்பத்தால் உருகி பரந்ததுபோலக் காமநோய் பரந்தது,அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கையில்லாத, வாய் பேசமுடியா ஊமை பிறரைக் கூவி அழைத்து பாதுகாக்க செய்யவும் இயலாது போல, காமநோயை அடக்கி பாதுகாக்கும் ஆற்றலை நான் பெறவில்லை.இதனைக் காக்க இயலவில்லை.
 எப்படி ஒரு உவமை சொல்லப்படுகிறது பாருங்கள்.இதுவே இப்பாடலின் சிறப்பு.

Sunday, July 27, 2014

குறுந்தொகை - 57


தலைவி கூற்று
(தாய் முதலியவர்களால் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்
   
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
   
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
   
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
   
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்

திருவே மாகிய வுலகத்
   
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

                       -சிறைக்குடியாந்தையார்

உரை-

தோழி. செய்ய வேண்டியவற்றை அறிந்து, பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாக இருவரும் , இவ்வுலகத்தில், பிரிவினால் ஒருவராகிய.துன்பத்தினின்றும் நாம் நீங்கி தப்புதற்கு, பூவானது நம் இடையிலே பட்டாலும், அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீரினிடம் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடு ஒன்றாக எங்கள் உயிர் போகவே என் விருப்பம்.

    (கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.

மகன்றில் என்பது நீர் வாழ் பறவைகளில் ஒன்று.இப்பறவைகள் ஆணும், பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மையுடையன.இவை மலர்களிடையே உடனுறையும் காலம், அப்பூ இடையே வரக்கூடுமாதலால் பூவின் கண் திரியும் மகன்றில் எனச் சொல்வர்

Saturday, July 26, 2014

குறுந்தொகை - 56



தலைவன் கூற்று
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடன்படாது தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய கடினமான இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)


பாலைத்திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்.


இனி பாடல்-


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
   
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
   
வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

                          -சிறைக்குடியாந்தையார்

    உரை-

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப் பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை வளையையுடைய கையாளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சில் அமர்ந்த என் தலைவி மிக இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.

    (கருத்து) கடினமான பாலை நிலத்தில் தலைவி வருதற்குரியவள் அல்ல,.

(பாலை நிலத்தில் நீரற்ற சுனையைத் தோண்டி வரும் சிறிதளவு தண்ணீரை மக்களும், விலங்குகளும் அருந்துவர்.காட்டுமல்லிகை அருகிலுள்ள மரங்களிலிருந்து  விழுந்து அழுகி நீரில் கொடும் தீய நாற்றத்தை உண்டாக்கும்.தலைவியை பிரிந்திருந்தாலும், அவள் உஅன் வந்திருந்தால் இந்நீரை குடிக்கும் நிலைக்கு ஆளாகி இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.ஆகவே, இப்படிப்பட்ட பாலை நிலத்திற்கு வராதது அவளுக்கு நல்லதே!

Friday, July 25, 2014

குறுந்தொகை -55



தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அணிமையில் நின்ற காலத்தில், அவன் விரைந்து மண்ந்து கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்துவளாய், “இவ்வூர் சிலநாளே வாழ்வதற்குரியதாகவும், இன்னாமையை யுடையதாகவும் இருக்கின்றது” என்று கூறி, மணக்காவிடின்
 தலைவி உயிர்நீப்பாளென்று தோழி புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர்  நெய்தற் கார்க்கியர்

இனி பாடல்-

 
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
   
பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு றைஇக்
   
கையற வந்த தைவர லூதையொ
   
டின்னா வுறையுட் டாகும்

சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

                      -நெய்தற் கார்க்கியர்


உரை-

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தை பொருந்தி, பிரிந்தோர் செயலறும்படி தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் மாலைப்பொழுதுடன், (தலைவி)தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

 (கருத்து) தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்.(அவளது உயிர் நீடிக்க)

(வி-ரை.) மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளியையும், . இவை கூம்பவென்றமையின் மாலைப் பொழுதையும் கொள்ள வேண்டும்.

குறுந்தொகை - 54


தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணம் புரியாது நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலால் உண்டாகும் வீண்வம்பையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் என்னை மணந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் மீனெறி தூண்டிலார்.


யானே யீண்டை யேனே யென்னலனே

 ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
   
கான யானை கைவிடு பசுங்கழை
   
மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.

                            - மீனெறி தூண்டிலார்

உரை-

தோழி! நான் இங்குள்ளேன் என்னோடு முன்பு ஒன்றியிருந்த என் பெண்மை நலன், தினை புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி காட்டுயானை கைவிட்ட பசிய மூங்கிலானது, மீனை கவர்ந்துகொண்டதூண்டிலைப் போல மேலே செல்வதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நான் பழகிய அவ்விடத்தே நீங்கியது.

    .(கருத்து) தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.

கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, தான் உண்ணுக் கொண்டிருந்த பசுமையான மூங்கிலை யானை விட்டதும்..அது வளைந்த நிலையிலிருந்து விடுபட்டு உடன் மேலே செல்வது போல (அது எப்படி..இருக்கிறதாம் மீனைப் பிடித்த தூண்டில் மேலே செல்வது போல இருக்கிறதாம்) அன்பு செலுத்தி அன்பற்ற காலத்து பிரிந்து சென்றானாம் தலைவன்.இந்த உவமையின் சிறப்பால் இப்பாடல் ஆசிரியர் நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் எனப் பெயர் பெற்றார்.

Thursday, July 24, 2014

மூன்றாம் பிறை

                                       
                             

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

குறுந்தொகை - 53



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணப்பேன் என்ற உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
   
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
   
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
   
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன

எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை
   
நேரிறை முன்கை பற்றிச்
   
சூரர மகளிரொ டுற்ற சூளே.

                       -கோப்பெருஞ்சோழன்.


உரை-.
தலைவனே! முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தின் மலர்கள் , உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பினது வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டு எடுக்கும் இடந்தோறும் செந்நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல்மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து தெய்வமகளிரை சுட்ட்க் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.

(கருத்து) நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.



காதலன், காதலியை மணப்பதாக வாக்குக் கொடுத்து நீண்ட நாள் ஆகிறது.ஆகவே விரைவில் மணம் செய்துகொள்ள வேண்டும் என தோழி உரைக்கிறாள்.

புன்னைமலர்,வெள்ளிய மணற்பரப்பு..நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போல  மணல் மேடாம்....என்ன ஒரு அற்புத கற்பனை.இப்பாடலின் சிறப்பு அதுதான்.

Wednesday, July 23, 2014

குறுந்தொகை -52



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வதை அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான் உண்மையைத் தாயார்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பனம்பாரனார்

இனி பாடல்-

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
   
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
   
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
   
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை

பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.    

                                   -பனம்பாரனார்

உரை -

நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையும், வரிசையான வெள்ளிப் போன்ற பல்லையுமுடைய பெண்ணே! தன்னிடமுள்ள யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நீ உன் கற்பிற்கு களங்கம் வருமோ என்று அஞ்சி நடுங்குவதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத நான் சிறிது சிறிதாக அப்பொழுதுக்கு அப்போது உனக்காக இரங்கி வருந்தினெனல்லவா?(இப்போது தலைவன் தலைவியை மணக்க முயற்சி செய்து வருகிறேன்)

ஜாதிகள் இல்லை

                               




தனக்கும் நான்கு கால்கள்

என்பதை மறந்து

லேப்ரடாரும்

ஜெர்மன் ஷெப்பர்டும்

மோதிக் கொண்டன

ஜாதிகள் இல்லையென...

தெரு விலங்கு சிரித்தது


குறுந்தொகை-51



தோழி கூற்று
(தலைவன் தலைவையை மணந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதால், அவன் விரைந்து வந்து மணக்கவில்லையே என கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் உன்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும்  உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-
 
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
   
நூலறு முத்திற் காலொடு பாறித்
   
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
   
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்

எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
   
அம்ப லூரு மவனொடு மொழிமே.

                     _ குன்றியனார்

உரை-

வளைவாகிய முள்ளையுடைய கழிமுள்ளானது, மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்களில் பரவுவதற்கிடமான தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை (நீ மணமுடிக்க) நானும் விரும்புகிறேன்.நம் தாயும் அவனிடம் மிக்க விருப்பமுள்ளதாய் உள்ளாள்.நம் தந்தையும் அவனுக்கு உன்னை மணமுடிக்க விரும்புவான்.(உங்களை இணைத்து)சிலரறிய பழி சொல்லும் ஊரிலுள்ளோரும் அவனுடன் உன்னைச் சேர்த்தே சொல்லுவர்.

(கருத்து - உன்னை மணமுடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.நீ கவலைப்படாதே)

தலைவணை தலைவி மணமுடிக்க தாய் விரும்புகிறாள்.யார் விரும்பினாலும் அதற்கான உரிமை தந்தைக்கு உண்டு என்பதால் "எந்தையுங் கொடீயர் வேண்டும் என்கிறாள் தோழி

அம்பல் என்பது சிலரறிந்து கூறும் பழிமொழி

Tuesday, July 22, 2014

மின்.....சாரம்

                         


இடி..மின்னல்..

கவிதை எழுதினால்

மழை பொழிகிறது

மின்சாரம் எழுத எண்ணின்

மின்...அதற்குமேல்

சாரம் இல்லை

குறுந்தொகை - 50






தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவன் தலைவிக்கு தூது அனுப்புகிறான்.அந்த தூதுவரை நோக்கி தலைவி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று கூறுகிறாள்)

மருதம் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-

.  
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
   
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
   
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
   
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்

புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

                       _ குன்றியனார்


உரை -

வெண்சிறு கடுகு போன்று சிறு பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து இருக்கும் தலைவனின் ஊரின் இடத்தில் நீர்த்துறையை அழகு செய்தது.(ஆனால்) அவர் முன்பு அளவளாவிய என் தோள், விளங்கும் வளையல்கள்..மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகுழும்படி மெலிந்து..தனிமையையே அழகாகப் பெற்றது.


 (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

 ஊரின் அழகு ஞாழல் மரப்பூவும்,மருதமரப்பூவும்..இரண்டும் இணைந்து அழகு பெற்றது.ஆனால்..தலைவன் இல்லாமால் தனித்து இருக்கும் என் தோள்களும், கை மணிக்கட்டும் ..மெலிந்து பொலிவிழந்து காணப்படுகிறது...   

Monday, July 21, 2014

குறுந்தொகை - 49


தலைவி கூற்று
(தலைமகன் விலைகளிடம் சென்று தலைவியை பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்பிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவனார்.

இனி பாடல்-


அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
   
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
   
இம்மை மாறி மறுமை யாயினும்
   
நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.

                - அம்மூவனார்

உரை-

அணிலின் பல்லைப் போன்ற தாது முதிர்ந்த கூரான முள்ளிச்செடியையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரை உடைய தலைவா..இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என் தலைவன் இப்பொழுது என்னிடம் அன்பு செய்த்தொழுகும் நீயே ஆகுக! உன் மனதிற்கேற்ற காதலி இப்போது உன் நெஞ்சு கலந்தொழுகும் நானே ஆகுக!


(கருத்து) நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!

(முள்ளிச்செடி வெளியில் முற்களோடு தோன்றினும் ,அச் செடியின் மணம் நிறைந்த மலர்களும், அம்மலரின் பூந்தாதும் பெற்றிருப்பதைப் போலத் தலைவன் புறத்தொழுக்கம் எப்படியாயினும், தன்னிடம் அன்பு நிறைந்தவனாகவே இருக்கிறான் என்பத் தலைவியின் கூற்று.

குறுந்தொகை -48



 
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை மணந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் பூங்கணுத்திரையார்

இனி பாடல் -

தாதிற் செய்த தண்பனிப் பாவை
   
காலை வருந்துங் கையா றோம்பென
   
ஓரை யாயங் கூறக் கேட்டும்
   
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்

நன்னுதல் பசலை நீங்க வன்ன
   
நசையாகு பண்பி னொருசொல்
   
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

                         - பூங்கணுத்திரையார்


உரை-

பலவகைப் பொடிகளால் செய்யப்பட்ட, மிகக் குளிர்ச்சியை உடைய விளையாட்டுப் பாவையானது, காலைப் பொழுதில் வருந்துவதால் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாக என்று ,விளையாட்டையுடைய மகளிர் கூட்டம் சொல்லக் கேட்ட பின்னும் இத்தகைய தன்மையுடைய வருத்தத்தை மிக அடையும் நல்ல நெற்றியினை உடைய தலைவியின் பசலை நீங்கும் படி தலைவரிடம் இவளுக்கு விருப்பமாகும் தன்மையை உடைய அத்தகைய ஒரு சொல்லானது இயலாதோ!


    (கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.

(மணலில் விளையாடுவது போல பாவையின் பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை.இது சங்ககால விளையாட்டுஅம்மகளிர் பலவகைப் பொடிகளால் பொம்மைப் பாவை செய்து விளையாடினர்.அப்பாவையை அப்படியே இரவு முழுதும் விட்டுச் சென்றால், காலையில் இப்பாவை வருந்தும் என தலைவியிடம் தோழிகள் கூற , தலைவி இரவு முழுதும் அதனைக் கை நழுவ விடாது காத்துக் கொண்டு வருந்தினாள்.அப்படிப்பட்ட தலைவியைக் காண நீண்ட நேரம் வராத தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்.)




Saturday, July 19, 2014

எதிர்பார்ப்பு (சிறிய கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

குறுந்தொகை - 46



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் நிலைகுறித்து கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உள்ள்து.ஆதலால் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி நான் சமாதானமடைகிறேன்” என்று தலைவி கூறியது).

மருதம் திணை - பாடலாசிரியர் மாமலாடன்

இனி பாடல் -

.  
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
   
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
   
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
   
தெருவினுண் டாது குடைவன வாடி

இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
   
புன்கண் மாலையும் புலம்பும்
   
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.

                         - மாமலாடன்

  உரை -
வாடிய ஆம்பல் மலரைப் போன்ற குவிந்த சிறகுகளையுடைய வீடுகளில் காணப்படும் குருவிகள், முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தில் கானும் எருவுன் நுண்ணிய பொடியைக் குடந்து விளையாடி, வீட்டிலுள்ளபிறையில்  தனது குஞ்சுகளுடன் தங்கியிருக்கும்.பிரிந்தாருக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் , தனிமையும் அத்தலைவர் பிரிந்து சென்ற நாட்டிலும் இல்லையோ? (இருக்கும். அதனால் அவர் விரைவில் வருவார்)
 
 
 (கருத்து) என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.

  இப்பாடலின் கருத்துக்கும், குருவிக்கும் என்ன சம்பந்தம்.?

குருவி, தன் குஞ்சுகளுடன் ஒன்றாக இருப்பது போல, தலைவர் சென்ற நாட்டிலும் மாலையும், தனிமையும் உள்ளதால், அந்த குருவியைப் போல குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வருவார்...என்கிறாள் தோழியிடம் தலைவி.

என்ன ஒரு கற்பனை பாருங்கள்!!!  

Friday, July 18, 2014

குறுந்தொகை -47



தோழி கூற்று
(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் சமயம் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்து தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்யவில்லை"
 என்று கூறி இரவு தலைவன் வருவதை விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது))

குறிஞ்சி திணை _ பாடலாசிரியர் நெடுவெண்ணிலவினார்

இனி பாடல்-

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
   
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
   
எல்லி வருநர் களவிற்கு
   
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

                         -நெடுவெண்ணிலவினார்

உரை -
 நீண்ட நேரம் காயும் வெண்ணிலவே! கரிய அடியடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும் காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.



  கருத்து _ தலைவன் தலைவியைக் காண இரவில் வருதல் இனி நல்லதல்ல, அவர் அவளை விரைவில் மணக்க வேண்டும்)

   (இரவில் வேங்கை மலர் பரவிய குண்டுக்கல்லை புலியென எண்ணித் தலைவன் அஞ்சக்கூடும்

குறுந்தொகை - 45



தோழி கூற்று
(வேசியிடம் சென்ற தலைவன் விட்ட தூதுவர் மீண்டும் தலைவியினிடம் வர தலைவன் வர விரும்புவதை வேண்டியபொழுது, தலைவி அதற்கு உடன்பட்டாள் என அறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடன்பட்ட இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஆலங்குடி வங்கனார்

இனி பாடல்-
 
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
   
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
   
மல்ல லூர னெல்லினன் பெரிதென
   
மறுவருஞ் சிறுவன் றாயே

தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.

               -ஆலங்குடி வங்கனார்


உரை-

காலையில் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து தூய அணிகலன்களை அணிந்த வேசியிடம் சென்ற வளமான ஊரையுடைய தலைவன் மிக்க விளக்கத்தை உடையவன் என எண்ணி, ஆண் குழந்தையினைப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மன வேதனை அடைவாள்.மனம் வருந்தும் செயலைச் செய்யினும் அதனை மறக்க வேண்டிய குடியில் பிறந்ததற்காக,


    (கருத்து)தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலால் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.

   (வேசியிடம் சென்று திரும்பிய தலைவன், தனது மனைவி ஆண்மகன் பெற்றதை அறிந்து அம்மகனைக் காணவருதலும், தலைவி கற்பொழுக்கத்தின் சிறப்பால், அவன் செய்த தவறை மறந்து ஏற்றுக் கொள்வது மரபு . ஆனால் செய்யுளில் "தெறுவதம்ம" என தோழி கூறியது அப்படி ஏற்றுக் கொளல் தகாது என்பதாக தோழி கருதுவதாகக் கொள்ள வேண்டும்) 

Thursday, July 17, 2014

குறுந்தொகை - 44




செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-


 
காலே பரிதப் பினவே கண்ணே
   
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
   
அகலிரு விசும்பின் மீனினும்
   
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

                                வெள்ளி வீதியார்

உரை-

என் கால்கள் நடந்து நடந்துநடை ஓய்ந்தன.இணைந்து எதிர் வருவாரைப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன.நிச்சயமாக இந்த உலகத்தில் என் மகளும், அவள் தலைவனும் அல்லாத பிறர், அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் அதிகம் உள்ளனர்.


 (தலவியையும், தலைவனையும் நான் காணவில்லை)

தலைவனையும், தலைவியையும் தேடிச் சென்ற செவிலித் தாய்க்கு இணையாக வரும் பலர் தெரிகின்றனர்..ஆனால் தன் மகளையும், தலைவனையும் தெரிவதில்லை.



Wednesday, July 16, 2014

குறுந்தொகை - 43



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “அவர் பிரிவாரென்று சிறிதும் கருதாமையின் நான் சோர்ந்திருந்தேன்; அக்காலத்து அவர்தம் பிரிவைக் கூறின் யான் ஆற்றேனென எண்ணிச் சொல்லாமற் போயினார். இதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தும்” என்று இரங்கித் தலைவி கூறியது.)

இன்றைய காலகட்டத்தில்..விட்டுக் கொடுத்தல் இல்லாததாலேயே..விவாகரத்துகள் பெருகிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

அந்தக் காலத்திலும் அப்படி நடந்துள்ளதாகத் தெரிகிறது.


பாலத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
 
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
 
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
 
நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

                     -ஔவையார்



  உரை-

தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி, சற்று அலட்சியமாய் இருந்துவிட்டேன்.தன் பிரிவை இவளுக்கு அறிவித்தால் அதற்கு இவள் உடன்படமாட்டாள் என எண்ணி என்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டார்.அச்சமயம்,இருவரிடமும் இருந்தது "தான்" என்ற போக்கு.கவலையுறும் என் நெஞ்சம், நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல இப்பொழுது கலக்கப்படுகிறது.

(தலைவர் தலைவியிடம் சொல்லாமல் பிரிந்ததால் தலைவி கலங்குகிறாள்)

நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல..(உவமை)

Tuesday, July 15, 2014

குறுந்தொகை - 42



தோழி கூற்று
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும்  நட்பு அழியாது” என்று குறிப்பால்  மறுத்தது.)
 
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

காம மொழிவ தாயினும் யாமத்துக்
 
கருவி மாமழை வீழ்ந்தென வருவி
 
விடரகத் தியம்பு நாடவெம்
 
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

                      - கபிலர்

உரை -

நடு இரவில் மின்னல், இடி இவற்றுடன் பெரு மழை பெய்தலால் நீர் வரத்து அதிகமாகி, அதனால் அருவியானதுபின் நாளிலும் மலையிடத்துள்ள வெடிப்புகளிலும், குகைகளிலும் ஒடும் ஒலி நிறந்த குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமமானது நீங்குவதாக இருப்பினும் உன்னிடத்தில் எனக்குள்ள நட்பு அழியுமோ?(அழியாது)



 (கருத்து) நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் உனக்கும் உள்ள நட்பு அழியாது.

 
(மழை பெய்து முடிந்தாலும், அதனால் உண்டான நீர்ப்பெருக்கு அருவியாய் நீண்ட நாள் ஓடுவது போல, ஒரு நாள் இரவே  பழகியிருந்தாலும் உன்னுடன் ஆன நட்பு இரவில் நீடிக்காவிடினும் அழியாது)

Monday, July 14, 2014

குறுந்தொகை - 41



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனி பொலிவிழந்ததை கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; அவரைப் பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)


  பாலைத் திணை  _ பாடலாசிரியர் அணிலாடு முன்றிலார்

இனி பாடல்-

காதல ருழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
 
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
 
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்

புலப்பில் போலப் புல்லென்
 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

.
                     -அணிலாடு முன்றிலார்.
 
உரை-

தலைவர் பக்கத்தில் இருந்தால் மிக மகிழ்ச்சியுற்று, விழா கொண்டாடும் ஊரிலுள்ளோர் மகிழ்வதைப் போலநிச்சயமாக மகிழ்வேன்..அவர் என்னை பிரிந்து சென்ற காலத்தில் ,பாலை நிலத்தில் பொருந்திய அழகிய குடியுடைய
சிறிய ஊரில் மனிதர்கள் நீங்கிச் சென்றதும் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல
பொலிவிழந்து வருந்துவேன்.


(தலைவனைப் பிரிந்தால் வருத்தமுறுவேன்) .

அதிக எண்ணிக்கையுள்ளோர் உள்ள வீடு.கலகல வென இருக்கும்.ஒருநாள் அவ்வீட்டிலிருப்போர் காலி செய்து வேறு இடம் சென்றுவிடுகின்றனர் அப்போது அவ்வீட்டினுள் நுழைந்தால் பழைய கல்கலப்பு இல்லை.வெறிச்சோடு இருக்கும் இல்லத்தில் அணில்கள் இங்கும் அங்கும் ஒடுகின்றன.இக்காட்சியை நினைத்துப் பாருங்கள்.
அப்படி வெறுமையாயிடுமாம் தலைவியின் மனம்.என்னவொரு அழகான ஒப்புமை!!

குறுந்தொகை - 40



தலைவன் கூற்று
(தலைவன் தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என தலைவி நினைப்பதை உணர்ந்து தலைவன்   ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் செம்புலப் பெயனீரார்


இனி பாடல்-

 
யாயு ஞாயும் யாரா கியரோ
   
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
   
யானு நீயு மெவ்வழி யறிதும்
   
செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.


                       செம்புலப் பெயனீரார்

உரை -

என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தைகைய உறவினர்? என் தந்தையும்,உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நானும், நீயும் ஒருவரை ஒருவர் முன்பு எவ்வாறு அறிவோம்?இம்மூன்றும் இல்லையாயினும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணோடு கலந்து அந்த நிறத்தை பெறுவது போல
 அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.
 
    (கருத்து) இனி நாம் பிரியமாட்டோம்.

Sunday, July 13, 2014

குறுந்தொகை - 39



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்
 
இனி பாடல்-

   
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
   
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
   
மலையுடை யருஞ்சுர மென்பநம்
   
முலையிடை முனிநர் சென்ற வாறே.

                   _ ஔவையார்

உரை-

எனது நெஞ்சில் தலைவைத்து உறங்குவதை வெறுத்தவன் பிரிந்து சென்ற வழியானது வெம்மையான வலிமையுடைய காற்றானது
மரக்கிளையிலே வீசுதலால் வாகை மரத்தினது பசுமை இழந்து முற்றிய காயானது ஒலித்ததற்குஇடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும் எனக் கூறுவர் .(அந்த இடம் சென்றவனை நினைத்து எவ்வாறு கவலைப்படாமல் இருக்கமுடியும்? என தலைவி தோழிக்கு உரைக்கிறாள்.

 (கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.

(அவள் காமம் தணிக்க தலைவன் அருகில்  இல்லை.தனிமையை மட்டுமின்றி, உடலின் தனிமையையும்,அவள் நெஞ்சில் உறங்க ஆளில்லை.அவளை தலவன் வந்து அணைக்கையில்தான் அவள் சுமை குறையும்.




Saturday, July 12, 2014

குறுந்தொகை -38



குறிஞ்சி திணை -கபிலர்

தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்க பொருளீட்ட சென்று நெடுங்காலமாக வாராதிருக்கவே, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, "உன்னை மணந்து கொள்ளும் பொருட்டே அவர் பொருளீட்டச் சென்றார்; அப்படியிருக்க  நீ அதனை நன்று என கருதாமல் வருந்துவது ஏன்?’ என்று வினவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்னிடம் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை -  பாடலாசிரியர் கபிலர்)

இனி பாடல்-

 
கான மஞ்ஞை யறையீன் முட்டை
   
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
   
குன்ற நாடன் கேண்மை யென்றும்
   
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
5
நீரொ டொராங்குத் தணப்ப
   
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

                            - கபிலர்
    உரை -

காட்டிலுள்ள மயிலானது, பாறையில் இட்ட முட்டைகளை, வெயிலில் விளையாடும் முசு குட்டிகள்(முகம் கருகிய ஒருவகை குரங்கு) உருட்டுவதற்கு இடமாகிய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு பிரிய, மை தீட்டப்பெற்ற நின் கண்ணினின்று உருகும் நீரோடு நில்லாது,அப்பிரிவிவை எண்ணி வருந்தாமல் பொறுத்துக் கொள்ளுதல் வன்மையுடையவர்க்கு மாத்திரம் எக்காலமும் நல்லதாகும் (ஆகவே பிரிவை பொறுத்து கொள்)
   

  கருத்து - தலைவனின் பிரிவை பொறுக்கும் வல்லமை தலைவிக்கு இல்லை

Friday, July 11, 2014

குறுந்தொகை - 37



தோழி உரைத்தது

(தலைவன் பிரிந்து சென்றுள்ளான்.தலைவியோ அதனால் வருத்தத்தில் உள்ளாள்.தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.அவர் சென்ற பாலை நிலத்தில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை தன் துதிக்கையால் மரப்பட்டையை உரித்து நீரை பருகச் செய்யும்.அதைக்கண்டதும் உன் நினைவு வந்து தலைவன் திரும்புவான்" என்கிறாள்)

பாலைத் திணை -பாடலாசிரியர் பெருங்கடுங்கோ  


இனி பாடல் -

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
 
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
   
மென்சினை யாஅம் பொளிக்கும்
   
அன்பின தோழியவர் சென்ற வாறே.

                    - பெருங்கடுங்கோ
 உரை-

தலைவன் உன் மீது அன்புள்ளவன். தலையளி செய்தலும் உடையவர்..அவர் சென்ற வழிகளில், பெண் யானையின் பசியை நீக்க, பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்படியே  பருகச் செய்யும்.(அதைக்கண்டு உன் ஞாபகம் வர திரும்புவார்)

கருத்து - தலைவர் விரைவில் வருவார்

(பெண் யானை தாகம் தீர்க்க ஆண்யானை செய்யும் செயல் தமக்குரிய மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும் இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.)

யா மரம் பாலை நிலத்தில் வளரும் மரம் என் சங்கப் பாடல்கள் சொல்கின்றன.

குறுந்தொகை -36



தலைவி தோழிக்கு உரைத்தது

(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.)


 குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

 
துறுக லயலது மாணை மாக்கொடி
   
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
   
நெஞ்சுகள னாக நீயலென் யானென
   
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்

தாவா வஞ்சின முரைத்தது
   
நோயோ தோழி நின்வயி னானே.
           
                                - பரணர்

  உரை -

உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய, மாணை என்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன், என் நெஞ்சு இடமாய் இருந்து பிரியேனென்று, எனது நல்ல தோளை அணைந்த போது அத்தலைவன் உறுதிமொழி அளித்தது மறந்தது உன் வருத்தத்திற்கு காரணமாகுமா(ஆகாதல்லவா?)
 

 (கருத்து) தோழி, தலைவன் உறுதிமொழி உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம் தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக் காரணமில்லை.

Thursday, July 10, 2014

குறுந்தொகை -35


தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று வினாவிய தோழிக்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்ட என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின்மேலேற்றித் தலைவி உரைத்தது.)

மருதம் திண - பாடலாசிரியர் கழார்க் கீரன்


நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
   
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
   
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
   
நுண்ணுறை யழி துளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

                                   - கழார்க் கீரன் எயிற்றி

உரை-

தலைவன் பிரிந்து செல்கையில், கர்ப்பமான பச்சை பாம்பினது கருவின் முதிர்வு போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு
மலருமாறு நுண்ணிய மழை பொழிந்து துளி பொருந்திய, தண்ணிய வருதலை உடைய வாடைக்காற்றை யுடைய கூதிர்காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழாததால் எனது கண்கள் கண்டிப்பாக நாணம் இல்லாதன..(என்கிறாள் தலைவி தோழியிடம்)

   

    (கருத்து) அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது தவறு.



    தோகையால் மூடப்பட்டுப் பசுமையாக இருத்தலின் கரும்பின் அரும்பிற்குப் பச்சைப் பாம்பை உவமை கூறினாள். கார்காலத்து மழை பெய்தபின் மேகத்தில் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்க் காலத்து வீழ்தலின், ‘நுண்ணுறை யழிதுளி தலைஇய வாடை’ என்றாள். தலைஇய - பெய்த வெனலுமாம். வாடையும்: உம் இழிவுச் சிறப்பு; வாடையை உடைய கூதிர்க் காலம் தலைவனும் தலைவியும் இன்புறுவதற்கு ஏற்ற காலம் . ஆதலின் உடன் இருப்பதற்குரிய காலத்தில் பிரிந்துறைகின்றார் என்று தலைவி வருந்தினாள்.

 

Wednesday, July 9, 2014

குறுந்தொகை - 34






(தலைவியை மணந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் தன்னை மணப்பான் எனும் செய்தியைக் கேட்டு இதுவரை உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவிக்கு உணர்த்தியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் கொல்லிக் கண்ணன்.

இனி பாடல்-
 
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
   
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
   
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
   
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ

டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
   
குட்டுவன் மரந்தை யன்னவெம்
   
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.

                         _கொல்லிக் கண்ணன்.
பாடலின் உரை-
 முதலில் உள்ளதாகிய கடற்கரையில் உள்ள வண்டாழ்ங்குருகின் பெரிய தொகுதியானது பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுவதற்கிடமான குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற எங்களது இச்சை விளங்குகின்ற அழகிய நெற்றிக்கு உரிமையுடையோளும், வரைவோடு வரும் அத்தலைவனே, தமர் ஒறுக்கவும், வருத்தத்திலிருந்து நீங்காராகி,மறிப்பத் தோழிய பல காரணங்கள் கூறி வருந்துதல் தகாது என்று மறுத்து கூறவும் தெளியாராகி தலைவரையும் பிரிந்து தனியாய்
உறங்கும் வருத்தம் இல்லாதவராகி இவ்வூரில் உள்ளார்.அவன் உன்னை மணந்து கொள்வான் எனும் இனிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைக.

(தலைவன் தலைவியை விரைவில் மணக்க உள்ளான்)

(நாம் அவனை தண்டித்தால் அவன் அதை பொருட்படுத்த மாட்டான்.நாம் அவனை மறுத்தால், அதைப்பற்றியும் கவலைப்படமாட்டான்.
ஊர் இதனைப் பற்றி முணுமுணுக்காமல் விடமாட்டான்.ஊரார் எங்கள் உறவைப் பற்றி புறங்கூறி முணுமுணுக்கட்டும்.அவளின் காதலன் அவன் என பேசட்டும்.
அவளது நெற்றி மறந்தை துறைமுகம்.மறந்தை அரசன் குட்டுவனது.அங்கே நாரைகள் பெரியளவில் மல்லர்களிம் பறை ஓசைக் கேட்டு பயப்படுகின்றன.


பாடல் தரும் செய்தி சுருக்கம்-

Monday, July 7, 2014

கேபிள் நீ ஜெயிச்சுட்டேடா....



ஒரு குறிக்கோளுடன்..அயராது உழைத்தால்...வெற்றிக்கனி நமது கைகளில்..வெற்றியை தொட்டுவிட்டால்..அது தொடரும்..

அதற்கான உதாரணம் "கேபிள் சங்கர்"

அவரது லட்சியம் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது.அதற்காக நான் அறிந்த நாள் முதல் அவரிடம் இருந்த உழைப்பைக் கண்டு வியந்துள்ளேன்.

அதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் எவ்வளவு என்பதை..அவருடன் இருந்த, இருக்கும் நண்பர்கள் அறிவர்.

சாதாரணமாக...திரைப்படம் பற்றிய ஆனந்த விகடன் விமரிசனத்தை..திரையுலகம் இன்றி, சராசரி ரசிகன் கூட எதிர்பார்ப்பதுண்டு.

அதுபோல, ஒரு படத்தின் விமரிசனத்தை, இணையத்தில் கேபிள் சங்கர் எப்படி விமரிசித்துள்ளார் என வலைப்பதிவர் மட்டுமின்றி, திரியுலகத்தினரே எதிர்பார்த்ததும் உண்டு.ஒவ்வொரு படத்தை எடுக்க பாடுபடும் குழுவை, தானும் திரையுலகில் நுழைய விரும்பும் இவர் இப்படி தெள்ளத் தெளிவாய் விமரிசிக்கிறாரே..இதனால் பலர் விரோதம் சம்பாதிக்க நேருமே எப்படி? என நான் வியந்தது உண்டு.

அதற்கான ஒரே பதில்...இவரிடம் இருந்த நம்பிக்கை, தவறு எனில் யார் செய்திருந்தாலும் தைரியமாய் சுட்டிக்காட்டும் திறன்.

சினிமா என்ற மீடியத்தை நன்கு புரிந்து கொண்ட விக்ரமாதித்தனான அவர்..கூறிய சரியான பதில்களைக் கண்டு...கட்டவிழ்த்து தப்பித்த சினிமா வேதாளத்தை, மீண்டும் மீண்டும் தளரா உழைப்பாலும், திறமையாலும் கட்டிப்போட்டு வெற்றிகரமாக சினி ராஜ்ஜியத்தை பிடித்துள்ளார்.

ஆமாம்...இப்படிப்பட்டவர்..குறையே இல்லா படம் எடுப்பாரா? என்ற வினா தோன்றுவோர்க்கு...மாட்டார் என்று நான் அல்ல அவரே பதில் கூறக்கூடும்.

ஏனெனில்...ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது..

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்...கண்டிப்பாக வெற்றிப் படத்தை அவர் தருவார்.அதற்கான ஆதாரங்கள்..பட டீசரும், பாடல்களும்..

கேபிள்...தளாரா உழைப்பாளியே...நீ ஜெயிச்சுட்டேடா..

(நான் அவரை ஏன் "டா" போட்டு விளிக்கிறேன் தெரியுமா? அதற்கான உரிமை எனக்குள்ளது.அதை அவரே அறிவார்)

குறுந்தொகை - 33



காதலுக்குத் தூதாக அன்னத்தை அனுப்புவது அக்கால மங்கையர் வழக்கம்.அதே போன்று தோழியரும் தூதாக செல்வர்.ஆனால் இப்பாடலில் தலைவனிடமிருந்து அவனது தலைமையை ஏற்றுக் கொண்ட பாணன் ஒருவன் வருகிறான்.அவன் சொல்வன்மையை பாராட்டுவதன் மூலம் தலைவி தன் தலைவனின் திறமையைப் பாராட்டுகிறாள்.இனி அத் தலைவியின் கூற்று..

(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).

மருதம் திணை= பாடலாசிரியர் படுமத்து மோசிகீரன்


   
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
   
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
   
இரந்தூ ணிரம்பா மேனியொடு
   
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.

                      - படுமத்து மோசிகீரன்

(தலைவனுக்குத் தூதாக வருகிறான் பாணன் ஒருவன்.அவனைப் பற்றி தலைவி தோழியிடம் உரைக்கின்றாள்}

உரை -


பெரும் தலைமையை (தன் தலைவன்) உடைய இப்பாணன் (என் தலைவனுக்கு) ஓர் இளைய மாணாக்கன்.என்னிடமே இவ்வளவு (சாதூர்யமாக) பேசுபவன் பொதுச் சபையில் எவ்வளவு பேசுவானோ? இரந்து உண்ணும் உணவினால் முற்ற வளராத மேனியனான இவன்  புதிதாக விருந்தும் பெறுவான்.

Sunday, July 6, 2014

குறுந்தொகை - 32




தலைவன் கூற்று
(தலைவியின் பிரிவை தாங்க முடியவில்லை.அவளை அடையும் பொருட்டு மடலேறினால் தலைவியின் மீது பழி உண்டாகும்.அன்றி, நான் சும்மா இருந்தாலும் அவளுக்குப் பழியாகும்.ஆகவே நீ என் குறையை அவளுக்குத் தெரிவி என தோழியினிடம் தெரிவிக்கிறான்)

 குறிஞ்சி திணை . பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லையார்.


காலையும் பகலுங் கையறு மாலையும்
   
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
   
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
   
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
5
தெற்றெனத் தூற்றலும் பழியே
   
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

                             -  அள்ளூர் நன்முல்லையார்.



உரை-

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும்,பிரிவதற்கான மாலைப் பொழுதும், ஊர் உறங்கும் இரவும், விடியற்காலமும் ஆகிய இச் சிறு பொழுதுகள் இடையே காமம் தோன்றில், அத்தகையோர் காமம் பொய்யானது.தலைவனிடம் பிரிவு வருமாயின்.பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து தெருவில்வந்து இவளால் இவன் இச்செயல் செய்தானென்று அனைவரும் அறியுமாறு தலைவி செய்த துயரை பலர் அறியச் செய்தலும் பழி வாங்கும் செயலாகும். அப்படியின்றி உயிருடன் இருத்தலும் பழிக்குக் காரணமாகும். (என தன்னிலைப் பற்றி தோழியிடம் கூறுகிரான் தலைவன்)

(நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்).






Friday, July 4, 2014

குறுந்தொகை - 31




ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள்.ஆனால் வீட்டில் பெற்றோரிடம் சொல்ல பயம். ஆனால். பெற்றோர் இவளுக்கான துணையைத் தேடுகின்றனர்.ஒருவனைத் தேர்ந்துமெடுக்கின்றனர்.இனியும் வாளாயிருந்தால் பயனில்லை என , அவள் தான் ஒருவனை விரும்புவதைத் தெரிவிக்கிறாள்.

இப்படி நடப்பது...இன்றைய காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் நடந்துள்ளது கீழ் கண்ட பாடல் மூலம் அறியமுடிகிறது.

( தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் ஆடும் அணங்கு. உடன் ஆடுபவனுடன் நட்பு கொண்டிருந்தேன்.இப்போது அவனுடன் ஆன; என்னோடு நட்பு பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் . அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).

மருதம் திணை-  பாடலாசிரியர்

இனி பாடல் -
 
மள்ளர் குழீஇய விழவி னானும்
 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
 
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
 
யானுமோ ராடுகள மகளே யென்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
 
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

                              -ஆதிமந்தியார்

உரை-

வீரர் கூடியுள்ள விழாவிலும், மகளிர் தங்களுக்குள் தழுவி ஆடும் கூத்து, ஆகிய எவ்விடத்தும் மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய அவனை நான் (இப்போது பிரிந்துள்ளேன்) காணவில்லை...நான் ஒரு ஆடுகளத்தில் ஆடும் பெண்ணாயிருந்தும்.என் கையில் உள்ள சங்கை அறுத்து செய்யும் வளையல்களை நெகிழச்செய்த  பெருமை பொருந்திய என் தலைவனும் ஆடுகளத்தில் உள்ள ஒருவனே

(இப்பாடலில் துணங்கை என்பது ஒருவகைக் கூத்து.மகளிர்
 ஆடும் இதில் முதற்கை கொடுப்பது ஆண்கள்.இப்பாடலில் ஆடும்மகளான தலைவிக்கு முதற்கை கொடுத்த தலைவனும் ஆடும் மகன் என்பது மறைந்து நிற்கும் செய்தி)

(இப்படிப்பட்ட தலைவன் இருப்பதால்..மணத்திற்குரிய பரிசத்துடன் வேறு ஒருவர்  அறன் ஆகாது என தோழியிடம் சொல்கிறாள்)

Thursday, July 3, 2014

குறுந்தொகை - 30



நாம் காணும் கனவுகள்..சில வேளைகளில் உண்மையைப் போல இருப்பதுண்டு.கண்டது கனவா..அல்லது உண்மை நிகழ்வா என ஆச்சரியப் பட்டதுண்டு.அது போன்ற ஒரு நிகழ்வு குறுந்தொகையில் தலைவிக்கு உண்டானது.

தலைவன் தலையைப் பிரிந்து பொருளீட்ட வெளியே சென்றுள்ளான்.அவனது பிரிவால்...வாடும் தலைவி..அவன் தன்னுடன் இருப்பதை போல கனவு காண்கிறாள்.

தோழி தலைவியின் ஆற்றாமைக்கான காரணம் கேட்க தலைவிஉரைக்கிறாள்.


இனி பாடல்

பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப் பேட்டு நன்னாகையார்.
   
கேட்டிசின் வாழி தோழி யல்கற்
   
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய
   
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
   
தமளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சா அய்த்
   
தமியேன் மன்ற வளியேன் யானே,

                     - கச்சிப் பேட்டு நன்னாகையார்.

உரை -
 தோழி (என் ஆற்றாமை காரணத்தை) கேட்பாயாக! பொய் கூறுவதில் வன்மை உடைய தலைவன், என் உடலை உண்மையாக அணைத்தாற்போல பொய்யாகிய கனவு உண்டாக..உண்மை யென எழுந்து..தலைவன் உள்ளான் என படுக்கையைத் தடவினேன்.வண்டுகள் அமர்ந்து (தேனருந்தி சென்ற குவளை) சென்ற குவளை மலரைப் போல நான் உண்மையாகவே மெலிந்து தனித்தவளாயினேன் .

வண்டுகள் அமர்ந்து சென்ற குவளை மலரைப் போல....உவமை எப்படி?

   


Wednesday, July 2, 2014

குறுந்தொகை -29



அவன் காதலிக்கிறான். தன் காதலியை வழக்கம் போல இரவில் சந்திக்க விரும்புவதாகக் கூறி..அச் செய்தியை அவளது சிநேகிதி மூலம் காதலியிடம் சொல்லச் சொல்கிறான்.அவளோ, அதெல்லாம் முடியாது என மறுக்கிறாள்.இவனோ..நம் ஆசையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே...என் காதலுக்கு ஆதரவானவர் யாரும் இல்லையே என மன வேதனைப்படுகிறான்.இதையே சொல்கிறது கீழே சொல்லியுள்ள பாடல்..

காதலியை இரவு சந்திக்க விரும்புவதாக வரச்சொல்லச் சொல்லி தோழியிடம் சொல்கிறான்.அவளோ மறுக்கிறாள்.அதனால்...தலைவன், தன் நெஞ்சிற்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறானாம்.

 குறிஞ்சிதிணை  - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
 
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
 
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
 
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
 
மகவுடை மந்தி போல
 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

                       - ஔவையார்

உரை -

தன் விருப்பப்படி இரவில் வராது மறுப்பது, பெய்யும் மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தை போல. உள்ளத்தால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தாமல் நின்று, பெருதற்கரியதை பெற விரும்புகிறாய்.உயர்ந்த மரக்கிளையில் பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல உன் கருத்தை ஏற்று,உன் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரைப் பெறின் உன் போராட்டமும் நன்றாயும், பெருமையாயும் அமையும்.
 (என தன் நெஞ்சிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான்)

(தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி இப்பாடல்)  

பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல  ,பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல....உவமைகளைப் பாருங்கள்..

Tuesday, July 1, 2014

.குறுந்தொகை - 28



நமக்கு ஒரு கவலை எனில் அதை பங்கு பெற யாரும் வரமாட்டார்.ஆனால், நம் மனமோ...ஆறுதலை எதிர்ப்பார்க்கும்.இன்னும் சிலர் உள்ளனர்...நாம் வேதனைப் பட்டாலும் பரவாயில்லை, நமக்கு வேண்டாதவன் இரட்டிப்பு வேதனைப் பட வேண்டும் என நினைப்பர்.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைப்பர்

தனக்குத் தூக்கம் வராமல் இருந்தால், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, "எப்படி தூங்குகிறான் பார்" என பொறாமைப் படுவார்கள்.

இந்த பாடலின் தலைவியும், கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்கிறாள்.தலைவனைப் பிரிந்து, அவன் வராததை எண்ணி தூக்கம் இன்றி இருக்கிறாள். ஆனால், ஊர் உறங்குகிறதே என கோபப்படுகிறாளாம்.

இனி பாடல்-

பாலை திணை -  பாடலாசிரியர் ஔவையார்


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
 
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
 
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
 
அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

                       -ஔவையார்

உரை-

சுழன்று அசைந்து வரும் தென்றல் காற்று வருத்தாது நிற்க,, என் தலைவனை நான் பிரிந்து வருந்துவதை உணராமல், தூங்கும் இந்த் ஊரில் உள்ளோரை நான்(சுவர் முதலியவற்றில்) முட்டுவேனா?(ஏதேனும் கருவி கொண்டு) தாக்குவேனா? ஓலமிட்டு கூப்பிடுவேனா? என்ன செய்வேன் என தெரியவில்லையே!