தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வதை அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான் உண்மையைத் தாயார்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பனம்பாரனார்
இனி பாடல்-
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.
-பனம்பாரனார்
உரை -
நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையும், வரிசையான வெள்ளிப் போன்ற பல்லையுமுடைய பெண்ணே! தன்னிடமுள்ள யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நீ உன் கற்பிற்கு களங்கம் வருமோ என்று அஞ்சி நடுங்குவதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத நான் சிறிது சிறிதாக அப்பொழுதுக்கு அப்போது உனக்காக இரங்கி வருந்தினெனல்லவா?(இப்போது தலைவன் தலைவியை மணக்க முயற்சி செய்து வருகிறேன்)
1 comment:
வணக்கம்
பாடலும் நன்று விளக்கமும் நன்று பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment