Tuesday, December 2, 2014

குறுந்தொகை-165




தலைவன் கூற்று
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு
   
விழைந்ததன் றலையு நீவெய் துற்றனை
   
அருங்கரை நின்ற வுப்பொய் சகடம்
   
பெரும்பெய றலையவீந் தாங்கிவள்

இரும்பல் கூந்த லியலணி கண்டே.




                                  -பரணர்.


 நெஞ்சே, ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைச் செலுத்துகின்ற வண்டி,  பெரிய மழை பொழிந்ததனால், அழிந்ததுபோல, இவளது கரிய கூந்தலின், இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நான் அழிந்து,  கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், கள்ளை உண்டாற்போல், நீ, ஒருமுறை விரும்பியதன் பின்னும்,  விருப்பத்தை அடைந்தாய்.



    (கருத்து) நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.

( கள்ளுண்டார் அறிவிழந்து நின்று களித்தல் ஒருமுறை கள்ளுண்டு மீட்டும் உண்ணும் வேட்கையைக் காமமுடையார் நிலைக்கு உவமை )

No comments: