தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)
குறிஞ்சி திணை- பாடலாசிரியர் குட்டுவன் கண்ணன்
இனி பாடல்-
கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன
செல்ல லைஇய வுதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
-குட்டுவன் கண்ணன்.
கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமாவை(ஒருவகை விலங்கு) நீ அலைப்ப, பகற் பொழுதும் மங்கியது; நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனிறாலைக்கிழித்த, கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய, பேதைமையையுடைய யானை, தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய, உச்சியின் இடையே உள்ளதாகிய, அஃது எமது ஊராகும்.
(கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.
No comments:
Post a Comment