தலைவன் கூற்று
(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)
நெய்தல் திணை- ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்
இனி பாடல்-
அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே.
-ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.
உரை-
மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம், இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது, என்று ஆராயாமல், அக்கண் வலையின்கண்ணே பட்டு, அக்கானலினிடத்தே தங்கியது, அறிவான் அமைந்தவர்கட்கு, தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை, அடைதலைப் பரிகரிமின்.
(கருத்து) நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.
No comments:
Post a Comment