Sunday, December 21, 2014

குறுந்தொகை-178



தோழி கூற்று
(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில் தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற உமது விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)


மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தை.

இனி பாடல்-

அயிரை பரந்த வந்தண் பழனத்
   
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
   
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
   
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
   
கரிய மாகிய காலைப்
   
பெரிய நோன்றனிர் நோகோ யானே.


                                       நெடும்பல்லியத்தை.

உரை-

 அயிரைமீன் மேய்தற்குப்பரந்த, அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து, அழகை மேற்கொண்டமலரையுடையனவாகிய,  உள்ளே துளையையுடைய திரண்ட தண்டையுடைய, ஆம்பலைப் பறிப்போர்,  புனல்வேட்கையை அடைந்தாற் போல,  இத்தலைவியின் நகிலினிடையே துயிலப்பெற்றும், நடுங்குதலை யொழிந்தீர்அல்லீர்; யாம் ,கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி,  நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்;  யான் அதனை யறிந்து வருந்துவேன்.



    (கருத்து) நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்பு நான் நன்கறிந்திலேன்.

.

    நீரில் வளர்ந்த ஆம்பலைப் பறிப்போர் விடாயுற்ற காலத்தில் எளிதிற் பருகுதற்கு அண்மையில் நீர் இருப்பவும் நீரை வேட்டு விரைந்தாற் போல, நும் வேட்கையை முற்றுவிக்கும் தலைவி இடையறாது உம் அருகிலே இருப்பவும் நீர் விரைந்தீர் என்றாள். இதனால் தலைவனது காம நிலை உரைக்கப்பட்டது.

No comments: