Wednesday, December 24, 2014

குறுந்தொகை-180



தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-
 
பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி
   
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
   
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
   
பைத லொருகழை நீடிய சுரனிறந்

தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்
   
அவ்வரி வாடத் துறந்தோர்
   
வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே.



                           -கச்சிப்பேட்டு நன்னாகையார்.



நம்மைப் பிரிந்த தலைவர்,  பேயின் பற்களைப் போன்ற,  பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற,  பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின், அழிந்து,பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின்,  கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற, வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில்,  ஓங்கிய,  பாலைநிலத்தைக் கடந்து, வன்னெஞ்சினராக,  தாம் போனநாட்டினிடத்து,  பொருளைஅடைந்தாரோ இல்லையோ?

    (கருத்து) தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?

 

      (யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்: ஓப்புமை)

No comments: