Wednesday, December 10, 2014

குறுந்தொகை-173



தலைவன் கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மதுரைக் காஞ்சிப் புலவன்


இனி பாடல்-
 
பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
   
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்
   
பூண்மணி கறங்க வேறி நாணட்
   
டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப

இன்னள் செய்த திதுவென முன்னின்
   
றவள்பழி நுவலு மிவ்வூர்
   
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா ருளெனே.



                                      -மதுரைக் காஞ்சிப் புலவன்.
உரை-

     பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய,  பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த,  பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாக,  இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற,  அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார்,  எல்லோர்க்கும் முன்னே நின்று,  தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால்,  இவ்விடத் தினின்றும்,  போகும் பொருட்டு உள்ளேன்.



    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

No comments: