Thursday, December 11, 2014

குறுந்தொகை-174



தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் என்னை அவர் பிரிந்து சென்றால், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-

 
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
   
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
   
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்
   
அத்த மரிய வென்னார் நத்துறந்து

பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்
   
பொருளே மன்ற பொருளே
   
அருளே மன்ற வாருமில் லதுவே.


                                  -வெண்பூதி.

 

   உரை-
 தோழி -, பெய்தலையுடையமழை, பெய்யாது நீங்கிய,  தனிமைமிக்க பாலை நிலத்தில்,  கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது,  காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அருவழிகள், கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம்மைப்பிரிந்து, பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இந்த உலகத்தில்,  நிச்சயமாக, செல்வமே உறுதிப் பொருளாவது;  அருள்தான்,  தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.



    (கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.

No comments: