Monday, December 8, 2014

குறுந்தொகை-172



தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘இவள் ஆற்றாள்’ எனக் கவன்ற தோழியை நோக்கி, அவர் என்னைப் பிரிந்து அங்கே எங்ஙனம் இருப்பார்? என்மனம் மிக வருந்துகின்றது” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நன்னாகையார்


இனி பாடல்-

தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்
   
பழுமரம் படரும் பையுண் மாலை
   
எமிய மாக வீங்குத் துறந்தோர்
   
தமிய ராக வினியர் கொல்லோ

ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
   
உலைவாங்கு மிதிதோல் போலத்
   
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.


                                -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

உரை-

    தோழி வலியையுடைய அழகிய சிறையையும்,  மென்மையாகப் பறத்தலையும் உடைய,  வௌவால்கள்,பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும்,  தனியரானார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நான் தனியாக ஆகுமாறு,  இங்கு என்னை  பிரிந்த தலைவர், தனிமையை உடையராகவும்,  இனிமையை யுடையரோ?  ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு, ஓர் ஊரின்கண் அமைத்த,  உலையிற் செறித்த துருத்தியைப் போல,  எல்லையை யறியாமல்,  வருத்தத்தை அடையும்.

   
(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்த தனிமையினால் துன்புறு வாரென்று என் நெஞ்சம் வருந்துகின்றதே யன்றி எனது தனிமைத் துன்பத்தைக் குறித்தன்று.

No comments: