தலைவி கூற்று
(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)
மருதம் திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்.
இனி பாடல்-
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.
-வெள்ளி வீதியார்.
யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், பாலை நிலத்திற் செல்லும் யானையினது, மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறிவனவாக; எமது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, உம்மையும் யாம் பெறேமாய் அழிக.
(கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.
பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய மண்டையிலே இட்டு வைத்தல் மரபு. (மண்டை -வாயகன்ற மண்பாத்திரம்; ) ‘அம்மண்டை மீன் நாற்றத்தைப் பெற்று வேறொன்றற்குப் பயன்படாதது போல எம் உயிர் எமக்கே வெறுப்புத் தருவதாயிற்று; நுமக்கும் இனிப் பயன்படேம்; இது கழிக’ என்றாள்.
தலைவனது பரத்தைமையால் மிக்க சினம் கொண்டவளாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.
9மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி)
No comments:
Post a Comment