Thursday, December 25, 2014

குறுந்தொகை-181



தலைவி கூற்று
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கிள்ளி கிழார்

இனி பாடல்-

 
இதுமற் றெவனோ தோழி துனியிடை
   
இன்ன ரென்னு மின்னாக் கிளவி
   
இருமருப் பெருமை யீன்றணிக் காரான்
   
உழவன் யாத்த குழவியி னகலாது

பாஅற் பைம்பயி ராரு மூரன்
   
திருமனைப் பலகடம் பூண்ட
   
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.

                           - கிள்ளி கிழார்.

உரை-



பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடைய பெண்ணெருமையானது,  உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல்,  பக்கத்திலுள்ள பசிய பயிர்களை,  மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது, செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட, பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு,  புலவிக்காலத்தினிடையே தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய, இதனாற் பயன் யாது?

   

    (கருத்து) தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.

No comments: