Saturday, December 27, 2014

குறுந்தொகை-182




தலைவன் கூற்று
(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மாதங்கீரன்

இனி பாடல்-

 
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
   
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
   
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி
   
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்

தெருவி னியலவுந் தருவது கொல்லோ
   
கலிழ்ந்தவி ரசைநடைப் பேதை
   
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.


                            -மடல் பாடிய மாதங்கீரன்.

 உரை-

அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,நம்மால் நெஞ்சம் நெகிழ்ந்திலள்,  நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது,  சிறந்தஉச்சியையுடைய பனையின் கண், முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை, முறைமையோடு அணிந்து,  நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி,  ஒரு நாளில், பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் கண் செல்லவும் தருவதோ?

 
    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

   

No comments: