Saturday, December 27, 2014

குறுந்தொகை-183



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என தலைவி உரைத்தது)
படத் தலைவி கூறியது.)

முல்லைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
   
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
   
சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்
   
டிரலை மானையுங் காண்பர்கொ னமரே

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
   
மென்மயி லெருத்திற் றோன்றும்
   
கான வைப்பிற் புன்புலத் தானே.

                   - ஔவையார்

உரை-

மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை,  மழை பெய்தபின் மெல்லிய மயிலினது கழுத்தைப் போலத் தோன்றும்,  காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண், எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள்,  நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில், சிறிய தலையையுடைய பெண் மானிடத்தினின்றும் நீங்கிய,  நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும், நம் தலைவர், காண்பரோ; (காணார்.)



    (கருத்து) கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.

   

No comments: