தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)
நெய்தல் திணை- பாடலாசிரியர் உலோச்சன்
இனி பாடல்-
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத்திரை பொருத திணிமண லடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்
கிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று
பிறர்பிற ரறியக் கூறல்
அமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே.
-உலோச்சன்.
உரை-
தோழி-, செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், உலாவுதலையுடைய அலைகள் மோதிய, செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள,அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது, பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த மலர்களையும், கரிய நீரையுமுடைய, கடற்கரைத் தலைவன்பொருட்டு, வருந்தேன்; இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று, பிறர் பிறர் அறியும்படி கூறிதல், அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல், என்ன துன்பத்தைச் செய்வதாகும்?
(கருத்து) ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.
(“தலைவன் என்னைப் பிரிந்தானென நான் வருந்தினேனல்லேன்; ஆயினும் என்னையறியாது என்பால் வேறுபாடுகள் உண்டாகின்றன. அது கண்டு பிறர் கூறுவன கூறுக; அவற்றால் என் காமம் வலியுறுமே யன்றி எனக்கு வரும் ஏதமொன்றில்லை” என்றாள்.)
No comments:
Post a Comment