செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
முல்லைத் திணை- பாடலாசிரியர் கூடலூர் கிழார்
இனி பாடல்
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.
-கூடலூர் கிழார்.
முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை, துடைத்துக் கொண்ட ஆடையை, துவையாமல் உடுத்துக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், தாளிப்பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த, இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகமானது, நுண்ணிதாக மகிழ்ந்தது.
(கருத்து) தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகின்றாள்.
No comments:
Post a Comment